Friday, January 28, 2011

இன்னும் மறக்கலடி...


மறந்துவிடச் சொல்லிவிட்டு
மருகி மருகிப் போறவளே!!
சத்தியமா! உன்னமட்டும்
சாகும் வரை மறக்கமாட்டேன்
சந்தேகம் ஏதுமுன்னா
சாமிகிட்ட கேட்டுப் பாரு.

பால்வாடி நீ படிக்க - உன்
பைக்கட்ட நான் தூக்கி
பத்திரமா விட்டு வந்த
பகல் பொழுது மறக்கலடி!!!

சித்திரை பொருட்க்காச்சியில்
சின்ன சின்ன சொப்பு கேட்டு உங்கம்மா
சேலைய இழுத்துகிட்டு நீ நிக்க
சீக்கிரமா ஓடிப்போயி
சேர்த்துவச்ச சில்லறையில் நீ
பார்த்து வச்ச சொப்பு வாங்கி பரிசா தந்த
சுக நிமிஷம் மறக்கலடி.

ஒரு மணி வாடகைக்கு
ஒத்தரூவா சைக்கிள் எடுத்து
பக்குவமா உன்னவச்சு
ஓட்ட பழக்கிவிட்ட
ஒரு மணியும் மறக்கலடி.

ஓடி விளையாட உன்
ஒருகாலு சுளுக்கிவிட
உசுரே போறதுபோல்
ஓயாம நீ அழுக
அழுங்காம தூக்கிவந்து
அப்படியே வீடு சேர்த்த
அந்த நொடியும் மறக்கலடி.

சந்தைக்கு போகையில
சரஞ்சரமா வார்தவீசி
சங்கீதமா நீ பேச
சாக்கு பைக்குள்ள
சத்தமில்லாம நான்
சேர்த்த வார்த்த கூட மறக்கலடி.

என் ஒரு விரல நீ பிடிச்சு
ஊரெல்லாம் ரவுண்டடிச்சு
ஓயாம கத பேசி
கடந்துவந்த தெருவெல்லாம்
கடைசி வரை மறக்கலடி.

முடியாம நான் கெடக்க
தனியாக நீ வந்து
முல்லைப்பூ கையால
தகதகன்னு தடவி விட்ட
தைல விரலோட
தடம் இன்னும் மறக்கலடி.

உன் கையால் சோறாக்கி
உன் வீட்டு மாடியில
ஊருக்கு தெரியாம
ஒன்னா உட்கார்ந்து
ஊட்டிவிட்ட நிலாச் சோறின்
நிறமின்னும் மறக்கலடி.

உசுரோடு உறஞ்சுபோன
உன்னோட நெனப்ப மட்டும்
ஒவ்வொன்னா நெனச்சு பார்க்க
ஒரு சென்மம் பத்தாது
உடனே மறக்கச் சொன்னா
உசுர் மட்டும் ஒட்டாது...











Tuesday, January 4, 2011

ஃபர்தா தேவதை...



இதோ!!
பர்தாவில் பவணி வருகிறாள் - என்
பருவதேசத்து பெ(ங்)ண்குயின்
கலர்களுக்கு நடுவே
ஜெராக்ஸ் எடுத்த
ஜென்ம வானமாய்
இன்றும் இரவு உடுத்தியே வருகிறாள்;


நெருப்பாய் கொதிக்கும்
நெடுநீள பாதையிலே
கருப்பாய் உடுத்தி கடந்தேன்னை போகிறாள்.


ஜல்லிக்கட்டு காளையாய்
மல்லுக்கட்டும் என் மனதை
கன்னுகுட்டி கண்காட்டி
கவர்ந்தேன்னை போகிறாள்.


காலங்காலமாய் கேட்ட தேவதை
கதைகளை பொய்யாக்கி
கருப்பு சிறகு விரித்து
(பர்தாவில்) பறந்து போகிறாள்.


போதி புத்தனாய் இருந்தவனை
அத்தர் வாசனையில்
பாதி நேர பித்தனாய்
அலையவிட்டு போகிறாள்.


ஏ!!பெண்னே உன்னை மட்டும்
ஒழித்துக்கொள்ளத்தானே இந்த பர்தா
பிறகு ஏன்??
பார்கும்போதேல்லாம் என்னையும்
இழுத்து எங்கோ ஒழித்துவைக்கிறாய்.


சுர்மா தீட்டிய உன்
சுடர் விழிகளை கொஞ்சம்
சும்மா இருக்கச்சொல்
ராத்திரி வானின் எரி நட்ச்சதிரமாய்
எதிர்படும்போதேல்லாம் என்னை
எரித்துவிட பார்க்குது.


ஓ!!
உலகுக்கு ஒரு சூரியன்
போதும் என்றுதான்
முகத்தை மறைத்து முக்காடு
போட்டு வருகிறாயோ!!


சீஸர் ரத்தம் சிந்திய இடத்தில்
சிவப்பாய் பூக்கும் ரோஜா என்ற
உமர்கயாமின் உவமை விளக்க
எத்தனை சீஸர்களின் ரத்தம் வாங்கி
இத்தனை சிவப்பாய் பூத்திருக்கு உன்
செவ்விதழ்!!!


உன் மருதானி பூசிய மந்திரக்
கைகள் காற்றில் கவிதை பாடி
எனக்கே என்னை மறக்கக் கேட்கிறது.


என் கனவுகளை கலர்மாற்றிட
ஒரு துண்டு வானவில்லோடு
கருப்பு வானில் கலர் நிலவாய் வந்தவளே
உன் வருகைக்காகத்தான் காத்திருந்தது
இந்த இதயம்!
 வா!!என் வாழ்வையும் வண்ணமாக்கு..












Related Posts with Thumbnails