Saturday, January 30, 2010

விரல் விந்தைகள்...



தலைப்பை படிச்சுட்டு என்னடா இவன் சிம்பு ஆரம்பிக்குற புது கட்சிக்கு ஆள் சேக்குற வேலைல இறங்க்கிடானொன்னு  சந்தேக படுரவங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்க ஆசை படுறேன்...யாரு கட்சிக்கும் நான் ஆள் இல்லை என் கட்சில எந்த ஆளும் இல்ல...(என்ன மனசுல பஞ்ச் சொல்லறதா நெனப்பா??)இதெல்லாம் எதுக்கு நாம விஷயத்துக்கு போவோம்...வாங்க


எனக்கு ரெம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த கல்யாண  மோதிரம் ஏன் மோதிர விரல்ல போடுறாங்கன்னு.சந்தேகத்தை தீர்க்க ஏன் ரூம்ல இருக்குற பெருசுங்க கிட்ட கேட்டேன் யாருக்கும் தெரியல ஒருத்தர் மட்டும் ரென்ப அறிவா சொன்னாரு ஏன்னா அது மோதிர விரல் அதுனால போடுறாங்கன்னு.நான் பொறுமையா இருந்துட்டேன்.(வேற என்ன பண்ண முடியும்...)
நம்ம ஆளுங்க காரணம் இல்லாம எதையும் பண்ண மாட்டங்கன்னு ஒரு பெரிய நம்பிக்கை.இத கண்டு பிடிக்காம விடகூடாதுன்னு தீவிரமா வலைல தேடுனேன்.கண்டுபிடுச்சு பார்த்தா அந்த காரணத்துல ஒரு லாஜிக்கே இல்ல.
அது என்னனா ....


மோதிர விரல்ல மட்டும்தான் ரெண்டு நரம்பு இருக்குதாம் அதுல ஒன்னு ஆம்பளை நரம்பாம்; இன்னொன்னு பொம்பளை நரம்பாம் அது ரெண்டும் சேர்ந்து இருக்குறதால அந்த விரல்ல கல்யாண மோத்திராம் போடுறாங்களாம்.இதுல லாஜிக் இடிக்குதேன்னு...மனசு கேக்கல இன்னும் தேடுனேன் ஒரு சூப்பர் மேட்டர் கண்ணுல மாட்டுச்சு.அத நீங்களும் கேளுங்க..இல்ல இல்ல நீங்களும் செஞ்சு பாருங்க...ரெடியா..


அதுக்கு முன்னாடி நம்ம விரல்களை பற்றி ஒரு விரிவுரை....
நம்ம கைல இருக்குற கட்டை விரல்தான் அம்மா,அப்பா விரல்,அடுத்த ஆள்காட்டி விரல்தான் நம்ம சகோதரன் ,சகோதரி விரல்,அடுத்த விரல் உங்களோட விரல்,(டேய் இது எல்லாமே என்னோட விரல்தாண்டா...அப்டின்னு கூட்டத்துல யாரோ கேக்குறாங்க ம்ம்ம்ம்...சொல்லறத மட்டும் கேக்கணும் நோ மொக்கை  கொஸ்டின் )அடுத்த மோதிர விரல் கணவன்,மனைவி விரல் (கவனமா கேக்கணும்...)அடுத்த சுண்டு விரல் குழந்தைகள் விரல்... புரிஞ்சுச்சா...புரியன ஒன்னும் பண்ண முடியாது...ஓகே ரெடி...


1...உங்க ரெண்டு கையும் வணக்கம் சொல்லற மாதிரி வச்சுகோங்க...(அதுக்கு முன்னாடி உங்களை யாராவது பாக்குராங்கலானு செக் பண்ணிகொங்க பாத்தா தப்பா நெனசுபாங்க...)
2...இப்போ எல்லா  விரல்களும் சரியா ஜோடி செந்துருச்சா...??
3...இப்போ உங்க விரல் இருக்குல...(நாடு விரல் )ஜோடியா பூமிய பாக்குற மாதிரி  உள்ள  மடிச்சு வச்சுகோங்க...
4...இப்போ எல்லா விரல்களும் ஜோடியா ஒட்டி இருக்கு ஓகே வா...
5...இப்போ அம்மா.அப்பா வா பிரிச்சு பாருங்க...பிரிஞ்சுருச்சு...
6...சகோதரன் ,சகோதரிய பிரிச்சு பாருங்க...பிரிஞ்சுருச்சு...
7...குழந்தைகளா பிரிச்சு பாருங்க...பிரிஞ்சுருச்சு...
8...இப்போ கணவன் மனைவிய பிரிச்சு பாருங்க...பிருஞ்சுச்சா ??முயற்சி பண்ணி பாருங்க...முடியலையா...முடியாது ரெண்டு கையும்  தனியா பிரிக்காம கணவன் மனைவிய பிரிக்க முடியாது...
கணவன் மனைவி பிரியாம இருக்கணும்...அதுனாலதான் கல்யாண மோதிரம் அந்த விரலில் போடுறாங்களாம்...இது சீனர்களுடைய நம்பிக்கையாம்...லாஜிக் நல்லா இருக்குல...

Thursday, January 28, 2010

ஒருநாள் ஒரு கவிதை...

முதலில் என் முந்தைய பதிவான மொட்டை மரம், குட்டி கனவுலகம் கவிதைகளுக்கு நண்பர்கள் அனைவரின்   ஊக்கத்திற்கும்  ஆதரவிற்கும் நன்றிகள்...மொட்டை மரத்திற்கு ஒரு சகோதரியின்   பின்னுட்டம் கவிதையின் ஆழம் சொல்லியது அவர்களின் கருத்துக்கும் நன்றி ...சரி பதிவுக்குள்ளே போவோம்...

தலைப்பை பார்த்தவுடனே தினமும் ஒரு கவிதை எழுதிருவானொன்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது...அதெல்லாம் ஒன்னும் இல்ல இது ஒரு வலை பக்கம்.எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்வதற்கான ஒரு முயற்சி அவ்ளோதான்...



காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல
சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 
கவிதைப் படிப்பதும் அது போலதான்! 

இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 
அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி
உங்கள் நாளை இனிமையாக்க இதுவொரு முயற்சி...


இப்படிதான்  ஒரு அழகான வர்ணனையோடு ஆரம்பிக்குது  பக்கம்.ஒரு இதமான இனிமையான விஷயத்தை தினமுக் காலைல அனுபவிச்சா எப்படி இருக்கும் அந்த அனுபவத்தை குடுக்குது இந்த பக்கம்.நிறைய புது கவிதைகள் ,இலக்கண கவிதைகள்,நம் தமிழ் இலக்கிய நுல்களில் இருக்கும் கவிதை,நம்ம ஆசான்களின் கவிதை,அழகிய தமிழ் பட பாடல்கள். இப்படி தினமும் ஒரு சுவையோடு வருது கவிதைகள்...
இங்கு நுழையவோ படைப்புகளை அனுப்பவோ  (யூசெர் நேம் ,பாஸ் வோர்ட் )  எந்த தடையும்  இல்லை... 


தினமும் நிறைய பேர் வந்து போறாங்க,அதுவும் இல்லாம   நம்   கவிதையும் அனுப்பினா அதுவும் சில நாட்களில் ஒரு நாள் கவிதையா வெளியே வருது.அடியேனின் படைப்பும் வந்து இருக்கு.நம் நண்பர்களுக்கும் இதை தெரிவிக்கவே இந்த பதிவு.நண்பன் வசந்து  விகடனுக்கு என் கவிதைய அனுப்ப சொன்னாரு நானும் அனுப்பி  அனுப்பி அனுப்பிட்டே இருக்கேன் என் நேரமோ என்னவோ தெரியல  ஒன்னும் அவங்க கண்ணுல பட்டதா தெரியல அதுக்கு வேற எதாச்சும் வழி இருக்காணும் தெரியல...
கவிதை எழுத்தும் நண்பர்களும்... கவிதை பிடித்த நண்பர்களும் இங்க போய்தினமும்  ஒரு புத்துணர்வு பெற வாழ்த்துக்கள்...


Tuesday, January 26, 2010

விதவை விருட்ஷம்...



(மொட்டை மரம்... இந்த தலைப்பும் சரியாய் இருக்கும் என நினைக்கிறேன்.)

வெந்நீர் வார்த்து வளர்ந்த விருட்ஷம்; 
காதல் காற்றின் கைகள் தழுவாது 
தானாய் தற்கொலை செய்ய  
உடல் உலுக்கி உதிர்த்து விட்டது
உயிர் துளிகளை.

வெட்டை வெளி மொட்டை மரமாய்
வெறித்து கிடக்கு முகவரி தொலைத்து.
சூரிய கதிர்கள் தட்டி கொடுத்தும்
மழை மகளுக்கு மணம் வர மார்க்கமில்லை.

மத்தியான மஞ்சள் மாறி 
மாலை நேரம் மருகி நிற்கையில் 
மலைக்காடு கடந்த மைனா கூட்டம் 
இளைப்பாற இடம் தேடி 
இரவு தூக்கம் இறக்கி வைக்க மரம்
இறங்கி ஆளுகொரு இடம் பிடித்து கொண்டன.

மொட்டை மர  கிளைகளில் 
இப்பொதுஇலைகளுக்கு பதிலாய் 
மைனா குஞ்சுகள்  முளைத்து; 
வானவில்லின் வண்ணம் போர்த்தி  
புது வகை புணர்ந்து நிற்கிறது.

விசித்திரம் விறுவிறுவென  பரவி
விந்தயை வேடிக்கை பார்க்க
விரைந்து வருகிறாள் மழைமகள்
கார்கூந்தல் தலை விரிக்க.

கார்மேகம்  கண்ட கானமயிலாய்  
தொகை விரித்து தொலைவாய்
நிற்கிறது மொட்டை மரம்.

மயில் பார்த்து மதி மயங்கி
மழை துளிகளை துப்பத்   
தொடக்கி விட்டாள் மழை மகள்.
மழை சூட்டில் கண்விழித்து
மறைவிடம் தேடி மறைந்து போனது
மைனா குஞ்சுகள்.

வண்ணம் கொட்டி  வகை தோகையாய்
வரைந்த கோலம்; தண்ணீர் கொட்டி  துடைத்த
வெறும் தரையாய் மீண்டும் வெறித்து போனது.
மொட்டை மரம்
விதி போட்ட விதவை கோலமாய்....                                             




                               

Sunday, January 24, 2010

''குட்டி'' கனவுலகம்...


திரும்பிய திசைகளெல்லாம்
தேவதை  தோழிகள்;
அவளுக்கும் எனக்கும் மட்டும்
தெரிந்த தேவ பாஷை - இங்கு
அனைவருக்கும் சரளமாய்.
பறக்க வசதியாய் சிறகுகள்,
பந்தாட பிரபஞ்சம்,
பால் குடிக்க நிலா.

பறந்து வந்தாள் ஒரு
பருவ தேவதை;
மின்மினி பூச்சிகள்
மின்னி தெறித்தன
அவள் சிரிப்பில்.
''கனவுலகம் வரவேற்கிறது''
வரவேற்றாள்.

வண்ணத்து பூச்சிகளின்
சிறகுகள் திருடி வந்து
ஆளுகொரு பக்கமாய்
விசிறிவிடும் இரண்டு
பூக்களுக்கு நடுவே நான்.

இறக்கைகளை களைந்து இளைப்பாற
இசை தட்டுகளை சுழற்றி கொண்டு
இறங்குகிறாள் இனியவள் ஒருத்தி.

நேற்று நிலா காட்டி  ஊட்ட; 
இன்று பால்சோறு ஊட்ட 
பால்நிலவே பக்கத்தில்.
சிதறிய சோற்றில்
குட்டி குட்டி நிலவாய்
எட்டி எட்டி பார்த்து வீண்மீன்.

நீர் பருக  வாய்திறந்தால் 
தேன் பாய்ச்சி தினரடிக்கிறாள்
தெவிட்டாத தேனருவி.
விருந்து முடிந்தது.

 சிறகுகள்  பூட்டி விட்டு
சிரிக்கிறான் சிங்கார தேவன்; 
இடுப்பு துணி ஈரமாக
விடிய வருகிறது...

கண்விழித்தால்,
பருவதேவதை தவிர அனைவரும்
பகல் விடுப்பு வாங்கி
பறந்து போனார்கள்.

சிறகுகள் தேடி துலாவுகையில்
அது அவளின் விரல்களாய் மாறி இருந்தது.
தேவ பாஷையில் ஒரு முத்தமிட்டு
அணைத்து கொண்டாள் அன்னை அவள் .
                                                                                                                                                                                                   

Monday, January 18, 2010

ஏண்டி...???


காற்றில்  கைநழுவி
கடந்து போன குடையை - ஏன் 
குற்ற படுத்துகிறாய்?
குழலிட்டு தேன்
குடித்த கருவண்டு
மலரின்  மது உண்ட  
மயக்கத்தில்;
திக்கு முக்கு தெரியாமல்
திணறுவதுதானே நியாயம்...

உன் உதடு சுட்ட தேநீரை - ஏன்
உதறி தள்ளுகிறாய்?
மலரே வந்து செவ்விதழ்  குவித்து  
தேன் எடுக்க; முதலில் 
கோப்பைக்கு  முத்தம் தந்தால்!   
சுட்டு வைக்காமல்
சும்மாவா இருக்கும்...

சூரியன் சுள்ளென்று
சுட்டதும் ஏன் - முகம்
சுளிக்கிறாய்?பார் நீ
சுளித்த சுளியலில் இன்னும் கொஞ்சம் 
சூடாகி எங்களைத்தான் சுட்டுஎடுக்கிறான்... 

காய்கிற நிலவை - ஏன்
கரைய விடுகிறாய்?
உலகே நிலவொளி குடித்திருக்க;
நீ மட்டும் பால் குடித்து
பால் நனைத்த  உதடோடு
படுக்க போனால்...

சும்மா  இருக்கும்  தென்றலை - ஏன்  
சூறாவளி  ஆக்கிவிடுகிறாய்?
கார்குழல் கலைத்த தென்றலை
கையமர்த்தி விட்டு காதலன்
விரல்கள் விளையாட கொடுத்தால்...

அடிக்கடி கழண்டு விழுவதாய்  
கால் கொலுசை - ஏன்
கடிந்து கொள்கிறாய்?
கொஞ்சி கொஞ்சி பேசும்
கொலுசொலியை
சின்ன சின்ன சிணுங்களில்
சிரிக்கின்ற சாக்கில் சிதறடித்தால்...

''போடா திருடா''...ஏன் திட்டுகிறாய்?
போதி  மர புத்தனாய்
பொறுமையாய் இருந்த உயிரை
புலம் பெயர்த்து  விட்டு
தொடதே  என்றால்...                                                                           

Wednesday, January 13, 2010

கள்ளி (பெண்) பால்...


அல்லி  மலர்ந்த அரைஞான் நேரம்
கன்னி அவள் கருவறையை
கனிவாய் பதம் பார்த்து
இனிமையாய் எட்டி உதைத்து
வெளிவர விண்ணப்பம் போடுகிறாள்.

வேண்டாமடி என் செல்லமே இருட்டி விட்டது
விடியும் வரை பொறுத்திரு...
நீ பிறந்தாவது விடியட்டும் நம் விதி.
உடனே வருவதென்றால்
உன் இருட்டு விடியல்  
உன்னை இடிய  விடுமடி.
அச்சம் என்னை ஓடிய விடுமடி.
அன்னையின் அருள் கேட்டு
பொறுத்தாள்  பொன்னியின் செல்வி.

சேவல் கூவும் முன்னே 
அன்னையின் அடி வயிற்றில் 
அலாரம் அடித்து வரப்போவதை 
உயிர் மொழியாய் வழிமொழிந்தாள்.
முட்டையை முட்டும்
பெட்டை  கோழியாய்
முட்டி மோதி பார்த்து விட்டு 
முக்களோடு முனங்களையும் சொல்லி தந்தாள்  
முல்லை இவள்.
பத்து நிமிட  பாடுக்கு பின்  பனிக்குடம் உடைத்த  
பால்குடமாய் பவனி  வந்தாள்.

தலைகிழாய் தரையிறங்கி 
தாரணி பார்க்க தயங்கிய   தங்கம் இவள்;
கண்னடைத்த  கண்ணகியாய்  
கண்திறக்க காலம் பார்த்து கிடந்தாள்.

சீம்பால்   சுரந்திருக்க  பச்சை
காம்பால் கறந்து வந்த கள்ளிப்பால் காத்திருக்கு;
கருத்த கிழவி ஒன்று காரியம் பார்த்திருக்கு.
காத்திருந்தது போதும் கண்விழி கண்மணியே
கதறி அழு பொன்மணியே
காது இருந்தால் அந்த
கடவுளாவது கேக்கட்டும்  உன் கதறலை.

கணநேரம் கழித்து கன்னியவள்
கதறுகையில் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ
கார்முகிலன் காது முட்டி கரைத்தது கார்முகிலை
கண்ணிர் கதறி மழையாய் உதறி விட்டான்
அந்த மந்தார பூமியிலே.  

காஞ்சு  போன கழனி எல்லாம்
கை விரித்து கவர்ந்து கொண்டது
கண மழையை.

மங்கை இவள் மனுஷி இல்லை
மகமாயி மறு உருவம் என்று
மக்களெல்லாம் மண்டி இட.
அருள் வாக்கு சொல்லும்
அம்மனின் அவதாரமாய்...
இதற்க்கு கள்ளிப்பாலே
குடித்திருக்கலாம் என் உயிரை.
அடிமனதில் அடித்து கொண்டு
வேப்பில்லை யால் வெளுத்து   
வாங்கினாள்  வேறொருவனை.                                                                          

Friday, January 8, 2010

ராத்திரி ரவுசு...ச்சீ... போடா....


 அடல்ஸ் ஒன்லி... இல்லை.
அதி காலை கண்ணடைத்து கிடக்க சரியாய் ஆறு மணிக்கு உம்மாஹ்...''நேரமாச்சுடா'' கண்விழித்து அலறினாள் ஒருத்தி, இன்னும் இருக்கமாய் கட்டிகொள்ள சொன்னால் இன்னொருத்தி, ப்ளீஸ்... என்னை விளக்கி விடாதே என்றால் மற்றவள்.இன்னும் முத்தம் தந்து தீரவில்லை இன்னொருத்திக்கு.அலறியவளை பத்து நிமிடம் கழித்து மீண்டும் அலற உத்தரவிட்டு ஒரு குட்டி கூடல்.யார் இவர்கள்?? எப்படி என் வாழ்வில் நுழைந்தார்கள்???.கொஞ்சம் ரகசியமாய் கேளுங்கள்...


நிஜமாவே அழகான  அழகிகள் என் படுக்கை அறையை  அலங்கரிக்க காத்திருந்தனர்.ஒருத்திக்கு தொட்டு அணைத்தால்  பிடிக்கும்;   ஒருத்திக்கு கட்டி அணைத்தால் தான் பிடிக்கும்; ஒருத்திக்கு இரவெல்லாம் முத்தமிட மட்டும் ஆசை; ஒருத்திக்கு இரவு முழுதும் என் மீது சாய்ந்து கொள்ள ஆசை;ஒருத்திக்கு பகலும், இரவு தன்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை. ஐந்து பேரை சமாளிப்பது சாதாரன காரியமா??ஹும்ம்ம்ம்..... உங்களுக்கு மட்டு  இவள்களின்  ராத்திரி ரவுசுகளை சொல்கிறேன் யாரிடமும் சொல்ல வேண்டாம்.ப்ளீஸ்.... 


முதலாவது சொல் பேச்சு கேட்பவள் தொட்டு அணைத்தால்  போதும் துவண்டு விடுவாள்.பகலில் அவளுக்கு வேலை இல்லை.இரவு உறங்குவதற்கு முன் வரை கண்விழித்து காத்திருப்பாள் என் அந்த ஒரு ஸ்பரிசத்திற்காக. சில நேரம் கண்ணடித்து கவனிக்க சொல்வாள்.அனைவரையும் மேற்பார்வை செய்பவளும் அவளே.


அடுத்தவள் இரவு முழுதும் அணைத்து கிடக்க ஆசை படுபவள்.அவள் ஆசை படுகிறாளோ இல்லையோ எனக்கு அவள் என்றால் ரெம்ப ஆசை.தூக்கத்தில் கூட அவளை தொட்டு கொண்டேதான் இருப்பேன் .இவள் மட்டும் தான் தினமும் அதிகம் என்னிடம் சிக்கி தவிப்பவள்.கொள்ளை அழகி.கட்டி கொள்வதற்காகவே தட்டி கொண்டு வந்தவள்.


அடுத்தவள் முத்த பிசாசு. ஒரு ரகசியம் யாரிடமும் சொல்ல வேண்டாம்.இவள் தட்டி கொண்டு வந்தவளின் தங்கச்சி.சொன்னால் நம்ப மாட்டீர்கள் இருவருக்கும் என் மேல் கண்டதும் காதல் .அந்த வீட்டு பெரியவர் கேட்டார் யாரை பிடித்திருக்கு என்று.நான் இரண்டுமே என்றதும்,இரண்டையுமே என் தலையில் கட்டி வைத்து விட்டார்.பாவம் அவருக்கு மற்றவர்களை பற்றி தெரியாது.இவள் வந்த முதல்  நாள் கொஞ்சம் விலகி விலகி போனால்.பின் வேறு வழி இல்லை வழிக்கு வந்து விட்டாள்.சத்தம் இல்லாமல் முத்தமிட்டு என்னை முனங்க வைப்பவள்.சில நேரங்களில் ஆக்களும் தங்கச்சியும் அவர்கள் வேலையை பகிர்ந்து கொள்வதுண்டு. வேறு எவளுடனும் கூட்டு வைத்து கொள்ள மாட்டார்கள். சொல்வதற்கு கொஞ்சம்
 கூச்சமா இருக்கு இருவரும் நான் ஆடை மாற்றி விட்டால்தான் பிடிக்கும்.ச்சீ... இரெட்டை பிசாசுகள்.


அடுத்தவள் ஊரில்  இருக்கும்போதே எனக்கு நல்ல பழக்கமானவள். ஊரில்
 இருந்து புறப்படும் முன் அம்மா எனக்காக தேடி பிடித்த பெண். அம்மாக்கு ரெம்ம பிடித்து போனதால் வேறு வழி இல்லாமல் கையோடு அழைத்து வந்தேன்.அனால் இவள் சமத்து நம்ம ஊர்க்காரி என்றாலும்  மற்றவர்களோடு சீக்கிரமே ஒத்து போய் விட்டால்.  என்மேல் கிடக்கும்போது ஒருவித சுகமான கதகதப்பு தருபவள் இவள் மட்டும் தான்.ஐ லவ் யு டி...


அடுத்தவள் தான் இம்சைக்காரி. இவளுக்கு நேரம் காலமே கிடையாது.நினைத்த போதெல்லாம் இவளோடு கொஞ்சி கொண்டே இருக்க வேண்டும்.இரவில் இவள் இம்சை அப்பா சொல்லி மாளாது.ஆனால் நிறைய படித்தவள்.சொன்ன நேரத்திற்கு எழுப்பி விடுவாள்.இவள் இருந்தாலும் இம்சை,இல்லாவிட்டாலும் இம்சைதான்.இவள்
 ஒருத்தி மட்டும் தான் என்னோடு அதிகம் இருப்பவள்.காதில் காதல் பேசியே  கொள்வாள். 


 இவள்களில்  ஒருத்தி இல்லை என்றால் கூட என் இரவே என்னவோ போல் ஆகிவிடும்.அலுவலகத்தில் கூட சிலநேரம் இவள்களின் நினைவில் மயங்கி போவதுண்டு.நான் எப்போது வருவேன் என அவள்களும் ஏங்கித்தான் போவார்கள்...
 சரியாய் பத்து நிமிடத்தில்  எழுப்பினாள் .எழுந்து ஒருத்தியை மடித்து விட்டு.மற்றவள் உறங்கி இருந்தால்.அக்கா தங்கையை  அடுக்கி விட்டு.ஒருத்தியை கையோடு கொண்டு போனேன்.


 இன்னும் கொஞ்சம் கதை கேளுங்க...                                                         

                                
Related Posts with Thumbnails